பதிவு செய்த நாள்
07
டிச
2022
05:12
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கார்த்திகை தீபக்திருநாளையொட்டி, நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவங்கள் கொண்ட அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினர் குவிந்தனர். பகல், 12:00 மணிக்கு, உற்சவமூர்த்தியான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 6:30 மணிக்கு, கோவில் முன் உள்ள தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, கோவில் தீபகம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.