நயினார்கோவிலில் ஏற்றப்பட்ட மகா நாக தீபம் : 3 நாட்கள் எரியும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 05:12
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாக நாத சுவாமி கோயிலில், திருக்கார்த்திகை விழாவையொட்டி மகா நாகதீபம் ஏற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு 14 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை மகா நாக தீப விழா துவங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நிறைவடைந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் கோயில் முன்பு உள்ள சந்தியா வந்தன மண்டபத்தில் மகா நாகதீபம் ஏற்ற பூஜைகள் துவங்கி நடந்தது. இங்கு நாகதோஷம் உட்பட அனைத்து தோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்ற தலமாக உள்ளது. தொடர்ந்து மகா தீபம் ஏற்றப்பட்ட பின், தீபாராதனைகள் நிறைவடைந்து, மயில் வாகனத்தில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வலம் வந்தார்.
இதன்படி 30 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இந்த தீபம், 3 நாளைக்கு அணையாமல் எரியும் வகையில், ஒரு நாளுக்கு 65 லிட்டர் என மொத்தம் 200 லிட்டர் வரை தீப எண்ணெய் ஊற்றப்படுகிறது. தொடர்ந்து நூல் திரியில் தீப ஒளி தரிசனத்தை, பக்தர்கள் மூன்று நாட்களும் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், நயினார் கோவில் சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.