பதிவு செய்த நாள்
08
டிச
2022
02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பரணி தீப தரிசன டிக்கெட், 2,000 ரூபாய் என பிளாக்கில் விற்றது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட்டது. பரணி தீபம் டிக்கெட், ஆன்லைன் மூலமாக, 500 ரூபாய் கட்டணத்தில், 500 பேருக்கும், மஹா தீபம், 600 ரூபாய் கட்டணத்தில், 100 பேருக்கும், 500 ரூபாய் கட்டண டிக்கெட், 1,000 பேருக்கும், ஒருவருக்கு, ஒரு டிக்கெட் வீதம், கோவில் நிர்வாகம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது. இவை அரை மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தன. இந்நிலையில், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட, பரணி தீப டிக்கெட், பிளாக்கில், 2,000 ரூபாய்க்கு வாலிபர் ஒருவர் விற்பனை செய்ததாக வீடியோ வைரலானது. இதற்கு, இந்து முன்னணி, வேலுார் கோட்ட தலைவர் சதீஷ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: மாவட்ட நிர்வாகம், தி.மு.க., அரசின் ஏவலாக உள்ளது. தீப திருவிழா தரிசன பாஸ், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, 20 பாஸ், வட்ட செயலாளர்களுக்கு, 10 பாஸ் என, ஆயிரக்கணக்கான பாஸ் என வினியோகம் செய்து, 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம், தி.மு.க.,வின் கள்ளச்சந்தையாக உள்ளது. அமைச்சர் வேலுவின் மகன் கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் உள்ளது. கோவிலினுள் சென்றால், கடவுள் முன் அனைவரும் சமம். ஆனால், ஆகம விதி மீறி, கோவிலின் மேல், முக்கிய பிரமுகர்களுக்கு ஷெட் அமைக்கப்பட்டது. கோவிலினுள் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களின் பக்தியையும், நம்பிக்கையும், திராவிட மாடல் அரசு, காசாக்கி கொண்டிருக்கிறது. டிக்கெட் விற்பனையில். தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அப்படி இல்லையெனில், டிக்கெட் விற்ற நபரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.