சதுரகிரியில் பவுர்ணமி பூஜை பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2022 02:12
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு 2 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மழையின் காரணமாக கடந்த இரு மாதங்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த இரு நாட்களாக மழை இல்லாததால் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு தாணிப்பாறை மலை அடிவாரத்தில் காலை 7:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்ப வேண்டுமென பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.