திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை நாளன்று சொக்கப்பனை எனப்படும் பெருந்தீப வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டுக்கான சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற உள்ளது.
இதற்கென அரங்கநாதர் கோயில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் இரவு 8 மணி அளவில் கதிர் அலங்காரம்" எனப்படும் மூலிகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் கார்த்திகை கோபுரம் பகுதிக்கு வருவார். தொடர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் பனை ஓலைகளால் நிர்மாணிக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வரும் பெருமாள் சக்ரத்தாழ்வார் சன்னதி பகுதியில் காத்திருக்க, இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படும். பின்னர் ஸ்ரீநம்பெருமாள் நந்தவனம் பகுதி வழியாகத் தாயார் சன்னதிக்கு செல்வார். அங்கு அவருக்கு திருவந்திக்காப்பு எனப்படும் திருஷ்டி கழித்தல் நடைபெறும். அதன் பின் மூலஸ்தானம் திரும்பும் முன்னர் ஸ்ரீநம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்த திருமுகப்பட்டயம் வாசிக்க கேட்பார். அதன்பின் திருக்கைத்தல சேவை சாதித்தபின் இரவு 10.15 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திரு.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.