பதிவு செய்த நாள்
13
டிச
2022
02:12
தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை அடுத்த பரக்கலக்கோட்டையில் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவார திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடந்தப்படும். மற்ற கோவில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோவிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபட்டனர். சோமவார திருநாள்களில் மரத்தின் இலைகளை பக்தர்கள் பறித்து செல்வது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டு சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. நேற்று இரவு கடை சோமவார்த்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பாக நடந்தது. விழாவிற்கு தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுமார் 5 லட்சத்திற்கும் மேற் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் நவதானிங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தினர். வருடத்தில் ஒருநாள் பொங்கல் பண்டிகையன்று மட்டும் பகலில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.