இடையகோட்டையில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2022 02:12
இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் உள்ள திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் கருவறை சுவற்றின் உள்பகுதி இடது பக்கத்தில் ஒரு கல்வெட்டு உள்ளதாக பாண்டிய நாடு பண்பாட்டு ஆய்வு மையத்தின் ஆய்வாளர்களான பேராசிரியர் மு.லட்சுமண மூர்த்தி மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து இருவரும் அங்கு கள ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: ஆற்றங்கரைகள் நாகரிகத்தின் தொட்டில் என்ற அடிப்படையில் வரலாற்றின் பல தடயங்கள் ஆற்றங்கரையில் புதைந்து கிடக்கின்றன என்ற தகவல்களை இன்றைய கீழடி மற்றும் பொருனை தொல்லியல் ஆய்வுகள் வழியே அறியலாம். இடையகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோயில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்த விருப்பாச்சி பாளையம் அமைந்துள்ள நங்காஞ்சி ஆற்றங்கரையில் ஜமீன் அரண்மனைக்கு அருகில் உள்ளது. சமகால வரலாற்று சிறப்பும் தொன்மையும் பழமையும் நிறைந்த இடமான இடைய கோட்டையில் உள்ள கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்த போது அது 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது தெரிய வந்தது. உதகம்பாலன் என்பவர் இக்கோயிலில் நிலைக் கால், சிற்பங்கள் போன்றவற்றை தர்மம் செய்து கொடுத்துள்ளார் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள 17 வரிகளில் கடைசி இரண்டு வரிகள் அழிந்து நிலையில் உள்ளன, என்றனர்.