பதிவு செய்த நாள்
14
டிச
2022
07:12
தென்காசி: கேரள மாநிலம், ஆரியன்காவு தர்மசாஸ்தா கோவிலானது சபரிமலை போன்று முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். தமிழகத்தின் தென்காசி மாவட்ட எல்லையில் ஆரியன்காவு அமைந்துள்ளது. கொல்லத்திலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
சபரிமலையில் சந்நியாசியாக காட்சி தரும் சாஸ்தா, இக்கோவிலில் புஷ்கலா தேவி எனும் சௌராஷ்டிரா குலப் பெண்ணை திருமணம் செய்தவராக கிரகஸ்தாஸ்ரம நிலையில் காட்சி தருகிறார். சாஸ்தாவானவர், சவுராஷ்டிரா குல தேவியான புஷ்கலையின் பக்தியை மெச்சி, பக்திக்கு முக்தியாக அவரை தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம். "மணக்கோலம் காட்டி திருமண வரம் அளிக்கும்" தெய்வீகத் திருத்தலம் ஆரியன்காவு என பக்தர்கள் இங்கு குடும்பத்தோடு வந்து வழிபடுவது வழக்கம். சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கோவிலுக்கு உள் பிரகார சன்னதிகளில் மலையாள தாந்திரீக முறைப்படியும், வெளிப்பிரகாரத்தில் நடைபெறும் சடங்குகள் யாவும் தமிழ்நாட்டு முறைப்படியும் நடைபெறுகிறது. இவ்விடத்தின் ஸ்தல புராணப் படியான நிகழ்வுகளை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் சாஸ்தாவுக்கு விவாஹ உற்சவம் நடைபெறுகிறது. இந்த திருமண வைபவங்கள் டிச.,26ம் தேதி இங்கு நடைபெற இருக்கிறது.
திருவிதாங்கூர் தேவஸ்சம் போர்டார் இந்த கல்யாண புறப்பாடு வைபோகத்துக்கு நாள் குறித்து, சம்பந்தி வீட்டார் அழைப்பாக, ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்கத்தினரை அழைக்கிறார்கள். இதையொட்டி ஆரியன்காவு கோவில் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் விழாக்கோலம் பூண்டுள்ளது. தர்மசாஸ்தாவுக்கு சாத்துப்படி செய்வதற்காக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கருவூலம், புனலூர், கிருஷ்ணன் கோவிலில் இருந்து (டிச.,16) "திருவாபரணம்" ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. டிச.,24ம் தேதி மாலை மாம்பழத்துறையில் இருந்து அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து, ஆரியன்காவுக்கு அழைத்து வருகின்றனர். கருவறையில் ஐயனின் ஜோதியோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறும். டிச.,25ம் தேதி மாலை ஆரியன்காவு ஊர் மக்கள் பாரம்பரிய உடையணிந்து குழந்தைகள், பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் வண்ண மாயமான ‘தாலப் பொலி ஊர்வலம் நடைபெறும். இரவு 7.00 மணியளவில் ராஜ கொட்டார அரங்கில் பாண்டியன் முடிப்பு @ நிச்சயதார்த்தம் நடைபெறும். டிச.,26ம் தேதி திருக்கல்யாண தினத்தை முன்னிட்டு, மூலஸ்தானத்தில் சகல அபிஷேகங்களும், அனைத்து தெய்வங்களுக்கும் வஸ்திர சாத்துப்படியும்,பொங்கல் படைப்பும், திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து சப்பர புறப்பாடும் நடைபெறும். அதன் பிறகு திருக்கல்யாண மண்டபத்தில், சாஸ்திர சம்பிரதாயப்படி பகவான் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, மங்கல குலவை முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெறும். டிச.,27ம் தேதி உச்சி கால பூஜையுடன் மண்டலாபிஷேக பூஜா நடைமுறைகள் நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்க நிர்வாகஸ்தர்களும், திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளும், திருக்கோவில் அட்வைசரி கமிட்டி நிர்வாகஸ்தர்களும் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்கத்தின் தலைவர் திரு.டி.கே.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.