பதிவு செய்த நாள்
16
டிச
2022
02:12
நாமக்கல்: வரும், 23ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலையுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. நாமக்கல்லில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும், 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை சுவாமிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெறுகிறது. காலை, 11:00 மணி முதல் சிறப்பு அபிேஷகமும், பிற்பகல், 1:00 மணிக்கு தங்கக் கவசம் சாத்துபடி செய்யப்படுகிறது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டாச்சாரியார் ரமேஷ் தலைமையிலான குழுவினர், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வரும், 21ம் தேதி முதல் வடை தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.