பதிவு செய்த நாள்
16
டிச
2022
03:12
மேட்டுப்பாளையம்: மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, காரமடை கோவிலில் பஜனை வழிபாடு நிகழ்ச்சிகள் துவங்கின.
காரமடையில் தாசபளஞ்சிக மகாஜன சங்க திருப்பாவை பஜனை வழிபாட்டுக் குழு உள்ளது. இக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம், 30 நாட்களும் அதிகாலை, 5:00 மணிக்கு அரங்கநாத சுவாமி கோவிலிலும், நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, திருப்பாவை பஜனை பாடுவர். பின்பு திருவிளக்கு வழிபாடு நடத்துவர். இன்று மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, தாசபளஞ்சிக மகாஜன சங்க வழிபாட்டுக் குழுவினர் பஜனை பாடினர். அதேபோன்று சந்தான வேணுகோபால் பஜனை குழுவினரும், திருமுருக பக்தர்கள் குழுவினரும், கோவிலிலும், நான்கு ரத வீதிகளிலும் பஜனை பாடினர். இக்குழுவினரை வரவேற்கும் விதமாக, நான்கு ரக வீதிகளில் தண்ணீர் தெளித்து, பெண்கள் கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.