Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » கம்பளிச் சித்தர்
கம்பளிச் சித்தர் கோயில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஆக
2012
13:02

மனிதர்களின் துர்குணங்களை மாற்றி தூய்மையாக்குவதற்காக அவதரித்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசியையும், விழிப்பையும் பொருட்படுத்தாதவர்கள். இதற்கு உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஐம்பது சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. அவற்றில் கம்பளி ஞானதேசிக சுவாமிகள் ஜீவசமாதியும் ஒன்று. எப்போதும் இவர் ஒரு கம்பளிப் போர்வையைத் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தபடியால் மக்கள் இவரை கம்பளிச் சித்தர், கம்பளிச் சாமியார் என்று அழைத்தனர். இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவராம். தன் ஆட்காட்டி விரலாலேயே சுருட்டைப் பற்ற வைத்துக் கொள்வாராம். ஒருமுறை இவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தபோது, அதன் விஷம் இவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அந்தப் பாம்புதான் இறந்து கிடந்தது. நீரில் மிதப்பது, நீருக்குள் வெகுநேரம் மூழ்கியிருப்பது, ஓரிடத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தோன்றுவது போன்ற சித்துக்களில் வல்லவர்.

வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம். இவருக்கு ரசவாத வித்தையும் தெரியும் என்பர். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை கொண்டவரல்ல. இந்த சித்தர் 1874-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், வெள்ளிக்கிழமை ஜலசமாதி ஆனார். மறுநாள், கம்பளி தண்ணியிலே என்ற அசரீரி கேட்ட மக்கள், இவருக்கு சமாதிக் கோயில் எழுப்பினர். சமாதிமீது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். தற்போது இந்த சமாதிக் கோயிலை, வெளிநாட்டில் இருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கம்பளிச் சித்தர் கோயில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோயிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். கம்பளிச் சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதி உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேரே - வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது.

பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச் சன்னதிகளில் விநாயகரும் முருகப் பெருமானும் அருள்புரிகின்றனர். இங்குள்ள தெய்வச் சிலைகள் அனைத்தும் கலைநயம் மிக்கவை. முருகனுக்கு எதிரிலுள்ள மயில் வாகனமும் புதுமையாக வடிக்கப்பட்டுள்ளது. முருகன் சன்னதியைக் கடந்து வந்தால் கஜலட்சுமி தனிச்சன்னதியில் அருளாட்சி செய்வதைக் காணலாம். வழக்கமாக, கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகள் இருக்கும். இங்கு எதிரில் ஒரேயொரு யானை மட்டும் காணப்படுகிறது. இந்த யானையும் புதுமையாக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அடுத்து சென்றால், ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் சக்தியும் வீற்றுள்ளனர்.கோயிலின் வெளிப்புறம் உள்ள பரந்தவெளியில் ஒரு பக்கம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் உள்ளன. இன்னொரு பக்கம் பிள்ளையார், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றன. ஆஞ்சனேயரின் திருவுருவம் கனிவான முகத்துடன் காட்சி அளிக்கின்றது. இன்னொரு பக்கம், கம்பளிச்சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன. அகத்திய முனிவரின் சிலையும் உள்ளது.

பரந்த வெளியின் முகப்பில் காணப்படும் ஓர் அழகிய வெண்கலச் சிலை பிரமிப்பூட்டுகிறது. சிவனும் சக்தியும் ஒரு அக்கினி வளையத்தின் நடுவே ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல்நுனி பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை; உயரத் தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம்; கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம். மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன் - சக்தி உருவங்கள்! முப்பது அடிக்கு மேலே உள்ள இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அக்கதவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதாவது சிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்கள். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு சிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்கிறார். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணி நேரம் பூஜை நடக்கிறது.

பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குகிறார். சிவன் -சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. இவ்வட்டத்தைச் சுற்றி பக்தர்கள் தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லிய வண்ணம் வேண்டிக் கொள்கின்றனர். சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளைத் தாங்கியபடி சிவபெருமானைப் போற்றிய அந்தக் காட்சி, காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாகும். பூஜை முடிந்த பிறகு, பக்தர்கள் பாதாள லிங்கத்தை தரிசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பு மகா சிவராத்திரி அன்று மட்டுமே கிடைக்கும். கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில், புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகில் ருத்ரபூமிப் பகுதியில் உள்ளது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.