பரமக்குடியில் சிவன் பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 03:12
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் மார்கழி மகா உற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலை நடந்தது.
*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்பட்டது. பின்னர் 6:00 மணிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவை பாடப்பட்டது. பெருமாள் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
*பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று காலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 6:30 மணிக்கு தீபாராதனை களுக்கு பிறகு சந்திரசேகர சுவாமி பிரியா விடையுடனும், விசாலாட்சி அம்பிகை தனித்தனியாக ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்தனர். தொடர்ந்து சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய காள பைரவ அஷ்டமி விழா நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு, அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி சொக்கநாதர் வீதி வலம் வந்தனர். அப்போது அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளியதை நினைவூட்டும் வகையில் பக்தர்களுக்கு அரிசிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
*இதேபோல் எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் மற்றும் நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயில்களிலும் காளபைரவ அஷ்டமி விழா நடந்தது.