உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயமாக திகழ்கிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்று மரகத நடராஜப் பெருமானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வருகிற டிச.,28 அன்று முதல் 2023 ஜன., 6 வரை மாணிக்கவாசகர் திருநாளும் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. தனி சன்னதியாக வீற்றிருக்கும் பச்சை மரகத நடராஜருக்கு 2023 ஜன., 5 (வியாழக்கிழமை) காலை 9:00 மணியளவில் மூலவரின் திருமேனியில் கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனம் படிகளைதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின் சந்தனாதி தைலம் பூசப்பட்டு மூலவர் மரகத நடராஜருக்கு 22 வகையான அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. கோயில் வளாகத்தில் தடுப்பு வரிசையில் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஏனென்றால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்தனம் அகற்றப்பட்ட மூலவரின் திருமேனி தரிசனத்திற்காக பக்தர்கள் திரண்டு வருகின்றனர். ஒலி, ஒளியால் சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காக சந்தனத்தால் காப்பிட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. வருடத்தில் 364 நாட்களிலும் மரகத நடராஜரின் சன்னதி முன்பாக ஸ்படிக மரகத லிங்கத்திற்கு நித்திய பூஜையாக பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜன., 5 அன்று சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு அபிஷேகமும் அச்சமயத்தில் தேவார இன்னிசை திருமுறை பாராயணம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்படுகிறது. இரவு 11:00 மணிக்கு மேல் மரகத நடராஜபெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடர்ந்து நடைபெறும். மறுநாள் ஜன., 6 (வெள்ளிக்கிழமை) புதியதாக சந்தனம் காப்பிடப்பட்டு சர்வ மலர் அலங்காரத்துடன், அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அன்று கூத்தர் பெருமான் திருவீதி உலாவும் மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் இரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து சிறப்பு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சேதுபதி ராணி ஆர்.பி.கே. ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சரண்யா ஆகியோர் செய்து வருகின்றனர்.