பதிவு செய்த நாள்
31
ஆக
2012
01:08
உதய்ப்பூரைத் தலைநகராகக் கொண்டு பூநாயகன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். தூதாராவ் என்றும் இவரை சில நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய மனைவிசந்திரமுகி. கிருஷ்ணபக்தியில் சிறந்த இத்தம்பதியரின் மகளாகப் பிறந்தவள் மீராபாய். குழந்தையாக இருந்தபோதே அவளின் பிஞ்சுமனம் கிருஷ்ணபக்தியில் ஈடுபடத் தொடங்கியது. விளையாடும்போது கூட கிருஷ்ண விக்ரகத்தை கையில் வைத்திருப்பாள். தூங்கும்போது அதை அருகில் வைத்துக் கொள்வாள். கிருஷ்ணரை விட்டுப் பிரிய அவளுக்கு மனமே இல்லை. நந்தா, முகுந்தா, நந்தலாலா, கிரிதாரி என்று கண்ணனின் பெயர்களை அவளது நா உச்சரித்துக் கொண்டே இருக்கும். தன்னை ஆட்கொள்ள கண்ணனே கணவராக வருவார் என்பதில் மீரா தீர்மானமாக இருந்தாள். இளமையில் சங்கீத ஞானம் பெற்றிருந்த மீரா, கிருஷ்ணர் மீது கீர்த்தனைகளைப் பாடினாள். தோழியர் சூழ்ந்திருக்கும் கன்னிமாடம் கிருஷ்ணரின் பஜனை மடமாகவே காட்சியளித்தது.
ஊர் வாயை மூட உலைமூடி இல்லை என்பார்களே! அதற்கு மீராவும் விதிவிலக்கல்ல. மீராவின் கிருஷ்ண பக்தியை உலகம் பழிக்கத் தொடங்கியது. இதனால் மகள் மீது வெறுப்பு கொண்ட மன்னர், மகளுக்கு விஷம் கொடுத்து கொல்லத் துணிந்தார். மீரா அதற்கு சிறிதும் அஞ்சவில்லை. கலகலவென்று சிரித்துக் கொண்டே விஷத்தைக் குடித்துவிட்டாள். அவள் கையில் இருந்த கிருஷ்ண விக்ரஹம் நீலநிறமாக மாறியது. அவளுக்கு உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த அதிசயத்துக்குப் பிறகு தான் மீராவின் பக்தியை அனைவரும் எண்ணி வியந்தனர். மீராவின் பக்தி பற்றி அறிந்த மேவார் மன்னன் ராணா, அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதன்படி இருவருக்கும் திருமணமும் நடந்தது. பக்தியில் சிறந்த அவன், கீதகோவிந்த மகா காவியத்திற்கு ரஸிகப்ரியா என்னும் உரையும், சங்கீதராஜம் என்னும் லட்சண கிரந்தத்தையும் எழுதினான். தன் மனைவி மீராவின் விருப்பப்படி கிருஷ்ணன் கோயில், அன்னதான சத்திரம், பஜனைமடம் என்று அரண்மனையில் கட்டி முடித்தான்.
மீராவின் தெய்வீக வாழ்க்கை பற்றிய தகவல் நாடு முழுவதும் பரவியது. மொகலாயப் பேரரசர் அக்பரும் மீராவின் பக்தியைக் கேள்வியுற்றார். தானும் அவளைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேவாருக்கு கிளம்பினார். இசைமேதை தான்சேன் என்பவருடன்,மீரா நடத்திய பஜனையில் யாரும் அறியாமல் கலந்து கொண்டார். அன்று ஏகாதசி திதி என்பதால், மீரா நாள்முழுவதும் கிருஷ்ணரின் சந்நிதியில் பாடியபடியே இருந்தாள். நாட்டின் ராணி என்பதை மறந்து கீர்த்தனைகளைப் பாடிய படியே ஆடினாள். பக்தியில் சிறந்த அவளின் கீர்த்தனைகள் அக்பரின் மனதை உருக்கியது. ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். விலைமதிப்பு மிக்க முத்துமாலை ஒன்றை கிருஷ்ணருக்கு காணிக்கையாக அளித்துவிட்டு கிளம்பினார். பேரரசர் அக்பர் மீராவின் பஜனையில் கலந்து கொண்ட சம்பவம் எப்படியோ மேவார் நாடு முழுக்க பரவி விட்டது. அவளது கணவன் ராணாவுக்கு இவ்விஷயம் கோபத்தை மூட்டியது. தன் மனைவியான மீராவிடம் இது பற்றி கேட்டான். அக்பரும் தான்சேனும் மேவார் வந்தது பற்றியும், காணிக்கையாக முத்துமாலை கொடுத்ததும் பற்றி என்னிடம் ஏன் சொல்லவில்லை? என்று ஆத்திரப்பட்டான்.
சுவாமி! உண்மையில் அவ்விருவர் மேவார் வந்ததும், முத்துமாலை காணிக்கை தந்ததும் எனக்கு தெரியாது. என் மனம் கிரிதர கோபாலனிடம் லயித்திருந்தது. தங்களோடு இருக்கும் நேரம் தவிர, எப்போதும் நான் கிருஷ்ணசேவையிலேயே பொழுதைக் கழிக்கிறேன் என்று மனம் கலங்கி பதிலளித்தாள். அன்று மாலை மீரா வழக்கம்போல், பஜனையில் கலந்து கொண்டு கிருஷ்ணரைப் பாடினாள். வழிபாடு முடிந்ததும் கிருஷ்ணர் வாழ்ந்த பிருந்தாவனத்திற்குப் புறப்பட்டாள். ராணா அவளிடம், என் கண்ணே! மீரா! உன் பக்தியை உணராமல் பேசிவிட்டேன். என்னை ஏற்றுக் கொள். அரண்மனைக்கு வந்துவிடு! என்று அழைத்தான். மீராவோ, அரண்மனை வாழ்வை வெறுத்தாள். பிருந்தாவனத்திற்கு சென்று விட்டாள். பிருந்தாவன கிருஷ்ணர் சந்நிதியில் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ரூபகோஸ்வாமி என்பவர் இருந்தார். மீரா அவரைச் சந்திக்க விரும்பினாள். ஆனால், கோஸ்வாமியின் சீடர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர்களிடம், கிருஷ்ணர் ஒருவரே புரு÷ஷாத்தமர். நாமெல்லாம் பெண்களே. அவன் ஒருவனே பதி. நாமெல்லாம் பசுக்கள். கிருஷ்ணர் என்ற உத்தமனைத் தவிர வேறு யாரும் புருஷர் இல்லை என்று குருவிடம் சொல்லுங்கள், என்று பதிலளித்தாள். இவ்வாறு அவள் சொன்னதை அறிந்த ரூபகோஸ்வாமி மனம் தெளிந்து மீராவை வணங்கினார். இதற்கிடையில், அக்பருக்கு மீரா பிருந்தாவனம் கிளம்பிய செய்தி எட்டியது.
அரண்மனை வாழ்வைத் துறந்த அவளை எண்ணி வருந்தினார். மீராவை சமாதானம் செய்து அழைத்து வராவிட்டால் மேவார் மீது படையெடுத்து வரப்போவதாக ராணாவுக்கு ஓலைஅனுப்பினார். உடனே,ராணாவும், ரகுநாத பட்டர் என்ற மந்திரியும் பிருந்தாவனம் சென்றுமீராவைச் சந்தித்து மேவாருக்கு அழைத்தனர். எனக்கு இனி உற்ற துணை கிரிதரகோபாலனாகிய கிருஷ்ணன் மட்டுமே. பக்தி செலுத்துவது மட்டுமே என் முழுநேரப்பணி. ராணியாக வாழ நான் விரும்பவில்லை. அப்படி வாழ அனுமதித்தால் மேவாருக்கு வருகிறேன் என்று பதிலளித்தாள். ராணாவும் அதை ஏற்று அவளை அழைத்துச் சென்றான். ஒரு கிருஷ்ண ஜெயந்தியன்று, அவள் சிப்ளாவைக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். வலக்கை தம்புராவை மீட்டிக் கொண்டிருந்தது. தன்னை மறந்து கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்திருந்தாள். அவளது உதடுகள் கிருஷ்ணநாமத்தை ஒலித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ண விக்ரஹத்தைத் தழுவிக் கொண்டாள். அவளுடைய இன்னுயிர் கிருஷ்ணரின் திருவடியில் கலந்தது.
கிருஷ்ணபக்திக்கு எடுத்துக்காட்டாய் இன்றும் மீரா நம் உள்ளத்தில் வாழ்கிறாள்.