சதுரகிரியில் மார்கழி பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2022 02:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 7:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 11:00 மணி வரை ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையில், சுவாமி தரிசனம் செய்தவுடன் மலையடிவாரம் திரும்பவும், கோயிலில் இரவு தங்குவதை தவிர்க்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தினர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். அனுமதிற்ற வழித்தடம் வழியாக பக்தர்கள் கோழி, ஆடுகளை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் கண்காணித்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.