பதிவு செய்த நாள்
24
டிச
2022
08:12
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு, சப்தரிஷி ஆரத்தி நடந்தது.
சப்தரிஷி ஆரத்தி என்பது, சிவபெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளை பெறுவதற்காக, கற்றுக்கொடுத்த சக்தி வாய்ந்த செயல்முறை. இந்த சப்தரிஷி ஆரத்தி, வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில், பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக, சப்தரிஷி ஆரத்தி, ஆதியோகியில் தான், கடந்த 2017 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, சப்தரிஷி ஆரத்தி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக, காசி விசுவநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் ஆதியோகி முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்தை சுற்றி அமர்ந்து, சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்தனர். படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன், உபாசகர்கள் நிகழ்த்திய செயல்முறை, சக்தி வாய்ந்த நிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில் உருவாக்கியது. மாலை, 6:30 மணிக்கு துவங்கிய சப்தரிஷி ஆரத்தி, இரவு 9:00 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.