பதிவு செய்த நாள்
24
டிச
2022
05:12
மதுரை : அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் துணைத் தலைவர்களில் ஒருவர் பரம பூஜனீய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ்
22.12.2022ம் தேதி முதல் 25.12.2022 ம் தேதி வரை ராமகிருஷ்ண மடத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.
அவர் இன்று 24ம் தேதி மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவில் அவர் பின்வருமாறு கூறினார்:
‘நாம் ஏன் ஆன்மிகத்தை பின்பற்ற வேண்டும்?’ என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுகிறது. ஏனென்றால், நமது மனதில் நிலையான ஆனந்தம் ஏற்பட வேண்டும். அப்படி ஆனந்தம் ஏற்படுவதற்கு உரிய முதல் மற்றும் முடிவு ஆன்மிகத்தை பின்பற்றறுவதுதான் ஒரே வழி. இந்த ஆன்மிக ஆனந்தத்தை பின்பற்றுவதற்கு பலவிதமான உதாரணங்களை நமது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நமக்கு அருளியிருக்கிறார். முழு மனதுடன் பகவானின் நாமத்தை ஜபம், பிரார்த்தனை செய்வதால், பகவான் நமக்குச் சொந்தமாகிவிடுவார். ஆன்மிக ஆனந்தத்தை எப்படி அடைய முடியும்? எளிய ஆன்மிக சாதனைகளின் மூலம் அடையலாம். ஜபம், தியானம், பிரார்த்தனை போன்ற ஆன்மிக சாதனைகளின் மூலம், நாம் நம் இதயத்தைத் தெய்விகமயமான சிந்தனைகளால் நிரப்பி வைத்திருந்தால்தான் ஆன்மிக இன்பத்தை அனுபவிக்க முடியும். தொடர்ந்து செய்யப்படும் பிரார்த்தனையின் மூலம் இறைவனுடன் தொடர்புகொள்வதுதான், ஆன்மிக சாதகர்களுக்குச் சுலபமானது. ஆன்மிக ரீதியில் இறைவனுடன் இணைந்த வாழ்க்கையே இன்பமாகும். இறைவன் திருநாமத்தை இடைவிடாமல் ஜபம், பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்விதம் செய்பவர்களுக்கு நிச்சயம் இறைவனின் அருள் கிடைக்கும். மனதை இறைவனை நோக்கிச் செலுத்தினால், மனம் தெளிவாகவும் சாந்தமாக, ஆனந்தமாகவும் இருக்கும். இவ்வாறு சொற்பொழிவாற்றினார். பரம பூஜனீய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் அவர்கள் மதுரையிலிருந்து நாளை 25ம் தேதி சேலம், ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார்.