பதிவு செய்த நாள்
25
டிச
2022
02:12
கம்பம்: ராம நாமம் ஒலிக்கும் பூலோகமே, வைகுண்டத்தை விட சிறந்தது என்று ஹனுமன், ராமபிரானிடம் கூறினார் என்று கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி விழாவில் பேராசிரியர் மோகனவேலு பேசினார். கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. சுந்தரகாண்டம் என்ற தலைப்பில் பேராசிரியர் மோகனவேலு பேசியதாவது :
ஹனுமனை சொல்லின் செல்வர் என்று ராமர் பாராட்டுகிறார். அறிவு, ஆற்றல், சொல்லாற்றல், சமயோசித புத்தி, வீரம், தீரம், கருணை இத்தனையும் ஒருங்கே பெற்றவர். ஸ்ரீ ராம ஜெயம். சொல்பவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் கல்வி, ஆயூள், உடல்நலம், கிரக தோஷ நிவர்த்தி உள்ளிட்ட எல்லா நன்மைகளும் கிடைக்கும். பாராத போரில் பார்த்தனுக்கு தேரில் கொடியாக இருந்து வெற்றிபெற அருளியவர். பூரண பிரம்மச்சாரி. நித்திய சிரஞ்சீவி. அஸ்டமா சித்திகளில் வல்லவர், இன்றைக்கும் என்றைக்கும் ராமாயணம் சொல்லும் இடங்களில் எல்லாம் இருப்பார். ராம கதையை மகிழ்ந்து கேட்பார். ராம நாமம் சொல்லும் அடியார்களின் துன்பத்தை உடனே தீர்த்து வைப்பார். இன்றும் கதலி வனத்தில் வசிக்கிறார். உனக்கு என்ன வேண்டும் என்று ஸ்ரீ ராமபிரான் ஹனுமனிடம் கேட்டபோது, ராம நாமம் ஒலிக்கும் பூலோகமே வைகுண்டத்தை விட சிறந்தது என்று கூறி, நான் அங்கிருக்கவே விரும்புகின்றேன் என்றவர். ஒவ்வொருவரும் அத்தகைய சக்திவாய்ந்த ராமநாமத்தை கூறி ஸ்ரீ ஹனுமனின் அருள் பெற்று வாழ முன்வர வேண்டும். என்றார்.