மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் ரூ.3.17 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 05:12
தேவதானப்பட்டி: புத்தாண்டை வரவேற்கும் விதமாக மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சுப மங்கள மார்கழிமாதம் பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான கோயில். இக்கோயிலுக்கு தமிழக உட்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்து கோயிலில் அம்மனை வணங்குவர். தினமும் மாலை 6:00 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பக்தர்கள் உத்தரவு கேட்பது வழக்கம். இதனால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோயிலில் வளர்ச்சி திட்டப்பணிகள்: செயல் அலுவலர் வேலுச்சாமி கூறுகையில் கோயில் வளாகப் பகுதியில் ரூ. 2.17 கோடியில் திருமண மண்டபம், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் பணிகள் துவங்க உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நச்சரிப்பு செய்த நான்கு பூஜாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரம்பரை நிர்வாக அறங்காவலர் கனகராஜ் பாண்டியன் கூறுகையில்: ஐந்து தலைமுறையாக கோயிலை நிர்வாகித்து வருகிறோம். 800 ஆண்டுகளாக 24 மணி நேரம் அணையாத நெய் விளக்கு எரிகின்றது. காமாட்சியம்மன் அருளால் 2023 புத்தாண்டு மட்டுமல்ல அனைத்து ஆண்டுகளும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்றார்.