பதிவு செய்த நாள்
31
டிச
2022
06:12
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வருகிற, 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில், காரமடை அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி விழா, வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 23ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. ஜன.1ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில், மோகன அவதாரத்தில், அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வருகிறார். அதைத் தொடர்ந்து இரண்டாம் தேதி, அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு என்னும், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்று இரவு ராப்பத்து உற்சவம் தூங்குகிறது. ஒன்பதாம் தேதி இரவு, குதிரை வாகனத்தில் அரங்கநாத பெருமாள், திருவீதி உலாவும், 11ம் தேதி ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.