பதிவு செய்த நாள்
03
ஜன
2023
04:01
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் பழமையான கொங்கு திருப்பதி கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, விஸ்வரூபமும், 4:30 மணிக்கு, திருமஞ்சனத்தை தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. அதன்பின், மார்கழி பூஜை, திருப்பாவை பாடப்பட்டது. காலை, 5:15 மணிக்கு, ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், கருட வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தை சுற்றி திருவீதியுலா வந்து, 5:30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து, வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், கருட வாகனத்தில், வெளி பிரகாரத்திலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல, தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவில், ஓணாப்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், மாதம்பட்டி, பீட் பள்ளம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில், சுண்டப்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.