பதிவு செய்த நாள்
03
ஜன
2023
04:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் பெருமாள், தாயார்களுடன் நேற்று காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு அன்னதான குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல்களில் பெருமாள், எழுந்தருளி அருள் பாலித்தார். இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவிலில், பெருமாள், தாயார்களுடன் சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்னதடாகம் அருகே மேல்முடி ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இது தவிர, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள், பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன்பாளையம், சின்னதடாகம், வரப்பாளையம், அத்திப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில்கள், சாமநாயக்கன்பாளையம் ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கோவில், கோவிந்தநாயக்கன்பாளையம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில்களிலும் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் அன்னதானம் ஆகியன நடந்தன.