உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு புதிய சந்தன காப்பு அணிவிப்பு: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 10:01
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் எழுந்தருளிய பச்சை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு புதிய சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது.
உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் மங்களநாத சுவாமி கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் தனி சந்ததி உள்ளது. ஒலி ஒளி அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தன காப்பிடப்பட்டு மரகத நடராஜர் காட்சி தருகிறார். இன்று காலை 8:00 மணி அளவில் சிறப்பு தீபாராதனைக்கு பிறகு மரகத நடராஜரின் திருமேனியில் கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு 31 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்பட்டு கரும் பச்சை நிறத்தில் மூலவர் காணப்பட்டார். பல்லாயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு 10:00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. புதிய சந்தனம் மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்டு சர்வமலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் அதிகாலை 3 மணி முதல் மாலை வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மரகத நடராஜரின் சன்னதி கம்பி கதவுகள் பூட்டப்பட்டது. மற்ற நாட்களில் மரகத நடராஜரின் சன்னதிக்கு முன்பாக உச்சிக்கால பூஜையில் ஸ்படிக, மரகத லிங்கத்தின் மூலமாக நித்திய பூஜை நடந்து வருகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.