பதிவு செய்த நாள்
06
ஜன
2023
10:01
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பத்தாவது நாளான இன்று ஆருத்ரா தரிசன காட்சி வெகு சிறப்பாக நடந்தது.
மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, கடந்த, 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒன்பது நாட்களும் நாள்தோறும் காலையும், மாலையும் திருவெம்பாவை, மாணிக்கவாசகர் திருவீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று, மாலை, 4:30 மணிக்கு, சாயரட்சைபூஜை, மாலை, 6:00 மணிக்கு, சிவகாமி அம்பாள் கிளிவாகனசேவை நடந்தது. அதனைத்தொடர்ந்து, அன்னூஞ்சல் நடந்தது. பத்தாம் நாளான இன்று அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தனூர் மாத பூஜையும், கால சந்தி பூஜையும் நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 4:05 மணிக்கு, மகா அபிஷேகம் துவங்கியது. இதில், நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும், பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர், கரும்புச்சாறு,விபூதி, கலசாபிஷேகம், வில்வபொடி,மாவுப்பொடி, குங்குமம், நெல்லி, திருமஞ்சாரம், பஞ்சாமிர்தம், பழச்சாறு ஆகிய 18 அபிஷேகம் நடந்தது. காலை, 8:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். அதனைதொடர்ந்து, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம் வழியாகவும், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து, மீண்டும் கனக சபை மண்டபத்தில் எழுந்தருளினர். ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.