பதிவு செய்த நாள்
06
ஜன
2023
12:01
குன்னூர்: கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் ஐயனோர், அம்னோர் வழிபாடுகளுடன், நடந்த கம்பட்ராயர் திருவிழாவில் பாரம்பரிய ராஜ உடையணிந்து கம்பீர நடனம் இடம்பெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி அருகே கொல்லிமலை, கோத்தகிரியில் திருச்சிகடி, ஊட்டியில் கோக்கால் உட்பட 7 கிராமங்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் கம்பட்ராயர் திருவிழா கொண்டாடுகின்றனர். குன்னூர் கேத்தி அருகே கொல்லிமலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த, 28ம் தேதி துவங்கியது. அருகில் உள்ள மலையில், தளன் நீர் எனப்படும் நீரோடையில், குளிரையும் பொருட்படுத்தாமல், மாலை 6:00 மணிக்கு மக்கள் குளித்து கோவிலுக்கு வந்து நடை திறந்தனர். கோவிலில் தங்கி 9 நாட்கள் விழா நடத்தினர். விறகுகள் கொண்டுவந்து நெருப்பு மூட்டி பாரம்பரிய இசையுடன், நடனமாடினர். நடை திறக்கப்பட்டு, ஐயனோர், அம்னோர் தெய்வங்களை வழிபட்டு, பொங்கலிட்டனர். இதில் வெள்ளி நாணயங்களை கொண்டு அலங்காரம் செய்தனர். உப்பு, அவரை, நெய் மற்றும் 3 ஒரு ரூபாய் நாணயங்கள் காணிக்கையாக செலுத்தினர். க்லோவ் என அழைக்கும் பூசாரி இருவர் பூஜைகள் நடத்தினர். தேர்கார்ன் என அழைகப்படும் பூசாரி வாக்கு கூறும் நிகழ்ச்சியை நடத்தினார். 9வது நாளான நேற்று நடந்த நிறைவு விழாவில், ஐயனோர் அம்னோர் வழிபாடுகள் நடத்தி ஆடல் பாடல்களுடன் கொண்டாடினர். இதில் ராஜ உடை அணிந்த 5 கோத்தர் பழங்குடியினர் கம்பீர நடனமாடி பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். விழாவில், படுக மக்கள் உட்பட அனைத்து மக்களும் பங்கேற்றனர். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டு, விழா நிறைவு பெற்றது. இனி அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும்.