பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரில் உள்ளன புகழ்பெற்ற கேரளபுரம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மார்கழி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழாவின் முதல் நாளான நேற்று விசாலாட்சி சமேத விசுவநாதர் சுவாமி, கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய ஆகிய உற்சவமூர்த்திகள் எழுந்தருளி திருத்தேர்களின் தெருவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடந்தன. உற்சவமூர்த்திகளை கண்டு வணங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பூர்ணாபிஷேகத்துடன் உற்சவ நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. இதையடுத்து ஐந்து மணிக்கு உற்சவம் "ஆர்திரா தர்சனம்" நடந்தது. தொடர்ந்து மூர்த்திகள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ரத பூஜை, ரக்ஷாதாரணம், யாத்ரா தானம் ஆகிய நிகழ்ச்சிகளையடுத்து ரதாரோகணம் நடந்தது. காலை 8.30 செண்டை மேளம் முழங்க திருமஞ்சனம் எழுந்தருளும் வைபவம் நடந்தன. இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் "கைலாசபதை " என்று வடம் பிடித்த பக்தர்கள் கோஷம் எழுப்ப தேவரதங்களின் பிரயாணம் ஆரம்பித்தனர். தேர் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும்.