சின்னமனூர் லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி : பக்தர்கள் கொந்தளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2023 10:01
சின்னமனூர்: சின்னமனூர் லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஹிந்து சமய அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் கொந்தளிக்கின்றனர். உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய மூன்று ஊர்களிலும் புராதானமான கோயில்கள் உள்ளன. பிரசித்திபெற்ற இந்த கோயில்களின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் குறிப்பிட்ட ஆண்டுகளில் நடத்தப்படுவதில்லை. இருந்தபோதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் திருப்பணிகள் உபயதாரர்கள் மேற்கொள்ள துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கம்பத்தில் உள்ள கம்ப ராயப் பெருமாள் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நடைபெற்றுள்ளது. ஆனால் சின்னமனூர் லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் பற்றி ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பக்தர்கள் கொந்தளிக்கின்றனர். நின்ற நிலையில் பெருமாள், அவரின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது இந்த கோயிலின் சிறப்பாகும் . இது வேறு கோயில்களில் காண முடியாதது . புராதானமும் சிறப்பும் பெற்ற இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை முன்வர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.