சபரிமலையில் அதிக வெப்பம்; தீ தடுப்பு பணியில் வனத்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2023 10:01
சபரிமலை : சபரிமலையில் அதிக வெப்பம் உள்ளதால் தீ தடுப்பு பணியில் வனத்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது.
சபரிமலையில் கடந்த நவம்பரில் மண்டல காலம் தொடங்கிய போது அதிக மழை பெய்தது. டிச.,15க்கு பின் மழை முடிந்து குளிர் தொடங்கியது. தற்போது குளிர் குறைந்து வெப்பம் வாட்டுகிறது. பகலில் அதிகமாக உள்ள வெப்பத்துக்கு ஏற்ப இரவில் குளிர் இல்லாததால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். வெயிலால் புதர்கள் காய்கின்றன. இது வனத்துறை ஊழியர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. இந்த புதர்களில் தீ பிடித்தால் அது வேகமாக பரவி பெரும் விபத்தை ஏற்படுத்தும். புல்மேடு பகுதியில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் காய்ந்த புற்களை வனத்துறையினரே எரித்து தீ தடுப்பு கோடு ஏற்படுத்தி வருகின்றனர். ஜோதி தெரியும் எல்லா இடங்களிலும் வனத்துறை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எருமேலி- கரிமலை, சத்திரம்- புல்மேடு பாதையில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீ பரவ வாய்ப்பு உள்ள இடங்களில் அவற்றை சரி செய்து தீ தடுப்பு கோடு ஏற்படுத்துகின்றனர். தீ தடுப்பு பணிக்காக வனத்துறை சார்பில் சபரிமலை, பம்பையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு தீயணைப்புத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.