பதிவு செய்த நாள்
07
ஜன
2023
09:01
சபரிமலை:சபரிமலையில் மகரஜோதி நாளுக்கும், அதற்கு முந்தைய நாளுக்கும் ஆன்லைன் முன்பதிவு முடிந்தது. ஜோதி தரிசனத்தை பிரச்னை இல்லாமல் நடத்த ஆலோசனை கூட்டங்கள் நடக்கின்றன.
சபரிமலையில் ஜன.,14ல் மகரஜோதி விழா நடக்கிறது. அன்று மாலை 6:35 மணிக்கு திருவாபரணம் அணிவித்து தீபாராதனைக்கு பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தரும். ஜோதியை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் சபரிமலையில் கூடுவார்கள். கடந்த ஆண்டுகளில் பம்பை ஹில்டாப்பிலும், புல்மேட்டிலும் ஜோதி தரிசனத்தின் போது ஏற்பட்ட விபத்தில் நுாற்றுக்ணக்கானவர்கள் இறந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பாதிப்பால் அதிக அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த ஆண்டு மிக அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு ஜன.,13, 14 தேதிகளுக்கு முடிந்து விட்டது. இந்த இரண்டு நாட்களில் சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்ய வேண்டிய வசதிகள் பற்றி அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடக்கிறது.பத்தணந்திட்டா கலெக்டர் தலைமையில் பலகட்ட ஆலோசனை நடந்த நிலையில் நேற்று ஏ.டி.ஜி.பி., தலைமையில் திருவனந்தபுரத்தில் பத்தணந்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, உணவு, குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல கிடைத்தல், நெரிசல் ஏற்படாமல் தவிர்த்தல் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று சபரிமலையில் மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று சன்னிதானம் போலீஸ் எஸ்.பி., வி.எஸ். அஜி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: முன்பதிவு செய்துள்ள பக்தர்களுடன் புல்மேடு வழியாகவும், ஸ்பாட் புக்கிங் மூலமும் கூடுதல் பக்தர்கள் வருவார்கள். கியூ மரக்கூட்டம் கடக்காமல் இருக்க கவனம் செலுத்தப்படும். மாளிகைப்புறம் கோயிலில் ஏற்பட்ட வெடி விபத்தால் கூடுதல் தீ தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருவாய், போலீஸ், தீதடுப்பு அதிகாரிகளின் கூட்டு பரிசோதனை தொடர்ந்து நடைபெறும். கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் திறக்கப்பட்டு பக்தர்கள் தங்க வைக்கப்படுவார்கள். கியூவில் நிற்பவர்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பெருவழிப்பாதையிலும், பம்பை - சன்னிதானம் பாதையிலும் கூடுதல் குடிநீர் இணைப்புகளை குடிநீர் வாரியம் நிறுவி வருகிறது. மருத்துவமனைகளில் கூடுதல் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகள் செய்யப்படுகிறது.