திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதியில் தைப்பூசத்திற்கு முன்னதாகவே பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை பார்க்க முடிகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக தைப்பூசத்தை ஒட்டி முருக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். செட்டிநாடு பகுதியில் நாட்டார், நகரத்தார் பலரும் தங்கள் ஊர்களிலிருந்து புறப்பட்டு குன்றக்குடியிலிருந்து பாதயாத்திரையை துவக்குகின்றனர். நகரத்தார் இன்றும் பாரம்பரிய பாதையில் கண்மாய்கரை, வயல் வரப்பு, தோட்டம் வழியாக செல்கின்றனர். இந்தாண்டு தைப்பூசம் பிப்.5ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் இம்மாத கடைசியில் தான் பக்தர்கள் யாத்திரை துவக்குவர். தற்போதே சில பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை பார்க்க முடிகிறது. நாட்டரசங்கோட்டை, அறந்தாங்கி பக்தர்கள் குன்றக்குடியிலிருந்து பழனிக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் கூறுகையில், கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த சில ஆண்டுகள் யாத்திரை செல்லாதவர்கள் பலரும் இந்தாண்டு மாலை அணிந்துள்ளனர். வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் வருவார்கள். இதனால் செளகரியமாக சாமி தரிசனம் செய்ய முன் கூட்டி செல்கிறோம். என்றனர்.