திருமங்கலம்: திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டியில் 400 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிர் நீத்த வீரருக்கு கோவில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது.
சொரிக்காம்பட்டி சேர்ந்த கருத்தமாயதேவரின் நான்கு மகன்களில் கடைசி மகன் அழகு தேவர். சிறந்த மாடுபிடி வீரரான இவர் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அங்கு சென்று மாடுகளை அடக்கி வந்துள்ளார். புகழ் பெற்ற மாடுகளை கூட சுலபமாக அடக்கும் திறமை பெற்றவர். 400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கீழக்குயில்குடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தன்னுடைய 26 வது வயதில் அழகு தேவர் கலந்து கொண்டார். அதில் ஐந்து காளைகளை அடக்கிய நிலையில் வயிற்றில் காயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்த நிலையிலும் வயிற்றில் துண்டை கட்டிக்கொண்டு 6 வது காளையையும் அடக்கி வெற்றி பெற்றார். இந்நிலையில் காயமடைந்த அவர் சிறிதுகளில் இறந்து விட்டார். அவரது வேண்டுகோளின் படி அவருக்கு சிலை வடித்து கோவில்கட்டி அவரது சந்தேகினர் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் மாடு பிடி வீரர்கள் வழிபட்டு சென்றால் வெற்றி நிச்சயம் என்ற ஐதீகம் இந்த பகுதியில் உள்ளது.