பதிவு செய்த நாள்
12
ஜன
2023
07:01
பழநி: பழநி மலைக்கோயில் மூலவர் சன்னதிக்கு ஜன.27ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு மருந்து சாத்தும் நிகழ்வு ஜன.23 ல் நடைபெற உள்ளது.
பழநி மலைக்கோயில் மூலவர் சன்னதிக்கு ஜன.27,ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜன.18, ல் பூர்வாங்க பூஜைகள் துவங்கப்பட உள்ளன. எனவே அன்று மாலை 4:00க்கு சாயரட்சை பூஜை நடைபெறும். ஜன.23,ல் மாலை முதற்கால யாக பூஜைகள் துவங்கும். தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்தபின் யாக சாலையில் எழுந்தருள்வார். ஜன.23 அன்று மாலை 3:00 மணி வரை பக்தர்கள் வழக்கமான நவபாஷாண மூலவர் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதன் பின் ஜன.26, வரை யாகசாலையில் ஆவாஹனம் செய்து எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசிக்கலாம். ஜன.27ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் வழக்கம்போல் நவபாஷாண மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
தங்க ரத புறப்பாடு நிறுத்தம்: யாகசாலை பூஜையில் சுவாமி எழுந்தருளியுள்ள ஜன.23, முதல் ஜன.27, வரை, மலைக்கோயிலில் கால பூஜை கட்டளைகள், தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு, நாள் முழுவதும் அன்னதான திட்டம் ஆகியவை நடைபெறாது. நாள் முழுவதும் அன்னதான திட்டம் மட்டும் வடக்கு கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெறும். மீண்டும் ஜன.28, முதல் வழக்கம் போல் கால பூஜை கட்டளைகள், தங்கரத புறப்பாடு, நாள் முழுவதும் அன்னதான திட்டம் மலைக் கோயிலில் நடைபெறும். சொர்ண பந்தனத்தில் பங்களிப்பு: மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் போது தங்கம் வெள்ளி நவரத்தின கற்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பக்தர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். இதனால் மருந்தின் அளவு குறைந்து விடும். எனவே மூலவருக்கு சொர்ண பந்தனத்தில் பக்தர்கள் சார்பாக கோயில் நிர்வாகத்தின் விலை உயர்ந்த இனங்கள் வைத்து அஷ்டபந்தன மருந்து சாற்றப்படும். இதில் பக்தர்கள் பங்களிப்பு செய்ய திருக்கோயிலில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
கும்பாபிஷேக விழாவிற்கு நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கு எண்: 899971944, IFSC CODE: IDIB000P014, பழநி கிளை. வங்கிக் கணக்கில் நன்கடை செலுத்தி அதன் விவரத்தையும், ரசீது வழங்க வேண்டிய முகவரியையும் கோயில் மின்னஞ்சல் jceomdu_32203.hrce@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதர முறையில் நன்கொடை அனுப்பும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திற்கு பெயர், முகவரி, குறிப்பு தெரிவிக்க வேண்டும். குடமுழுக்கு யாகசாலை பூஜை பொருட்கள், அன்னதானம் உள்ளிட்ட பொருட்கள் நன்கொடையாக வழங்க தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். குடமுழுக்கு விழாவிற்கு புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து கோயிலில் தங்கரத பதிவு செய்யும் அலுவலகத்தில் ஜன.15, முதல் ஜன.17, வரை வழங்க வேண்டும். என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.