பதிவு செய்த நாள்
12
ஜன
2023
12:01
திருப்பூர் : வைகுண்ட ஏகாதசி விழா, கூடாரை வெல்லும் உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது; ஆண்டாள் நாச்சியார், பெருமாளுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவில், எம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று, நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்தார். அதற்காக, பகல் பத்து உற்சவமும், சொர்க்கவாசல் திறப்பு மற்றும் இரவுப்பத்து உற்வசமும் நடைபெறுகிறது.நேற்றுடன், இராப்பத்து உற்சவம் நிறைவு பெற்றது; முன்னதாக, நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று காட்சியளித்து, நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கிய நிகழ்வு நடக்கும். மார்கழி விரதம் இருந்த ஆண்டாள்நாச்சியார், 27வது நாளான நேற்று, கூடாரை வெல்லும் உற்சவத்தில், திருமணிக்கோலத்தில் அருள்பாலித்தார். திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், மாலை 6:00 மணிக்கு கூடாரை வெல்லும் உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், இரவு ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சிகள் நடந்தது. கோவில்வழி, பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில், காலையில் கூடாரை வெல்லும் உற்சவமும், மாலையில் ஆழ்வார் மோட்ச உற்சவமும் கோலாகலமாக நடந்தது.
ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வேணுகோபால சுவாமி, ஆண்டாள் நாச்சியார் திருமணக்கோலத்தில் அருள்பாலித்தனர்.
அவிநாசியிலுள்ள பூமிநீளாதேவி சமேத ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.