பதிவு செய்த நாள்
12
ஜன
2023
03:01
.அவிநாசி: திருக்குறளை தவிர்க்கவும் முடியாமல், அதன்படி நடக்கவும் முடியாமல் ஆட்சியாளர்கள் உள்ளனர் என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர்கள் பேரவை சார்பில் நடந்து வரும் கம்பராமாயண தொடர் சொற்பொழிவில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது; புராண இலக்கியங்களை படிக்க வேண்டும்; அதன் வழி நடக்க வேண்டும். அதில் கூறப்படும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என, பலரும் திருக்குறள் படிக்கின்றனர்; திருக்குறளை கொண்டாடுகின்றனர். திருவள்ளுவருக்கு, 1,330 அடியில் சிலை நிறுவுகின்றனர்; திருவள்ளுவர் தினம் கொண்டாடுகின்றனர். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்; ஆட்சியாளர்கள் எப்படி, நாட்டை ஆள வேண்டும். மது, சூதாட்டம், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி நடக்க வேண்டும் என்பது போன்ற பல நல்ல கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால், வீதிக்கு வீதி மதுக்கடைகள் உள்ளன. லஞ்சம், ஊழல் ஆகியவை புரையோடி கிடக்கிறது. திருக்குறளை தவிர்க்கவும் முடியல; அதன்படி நடக்கவும் முடியல. திருக்குறள் போன்ற இலக்கியங்கள், இதிகாசங்கள் தர்மம், கலாசாரம், பண்பாடை போதிக்கின்றன; அதை பின்பற்ற வேண்டும். நமது நாட்டின் சம்பிரதாயம் தான், வெளிநாடுகளிலும் உள்ளது. ஆனால், அவை மறக்கடிக்கப்பட்டு விட்டன. வெளிநாட்டு கலாசாரம், பண்பாட்டை கேலி கிண்டல் செய்தவர்களின் பிள்ளைகள் தான், இன்று பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று அதே கலாசாரம், பண்பாட்டை கற்று வருகின்றனர் இவ்வாறு, அவர் பேசினார்.