133 அடி உயரம் கொண்ட அய்யப்பன் சிலை; கேரளாவில் ரூ.25 கோடியில் அமைகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2023 02:01
கம்பம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா நகரில், 133 அடி உயரம் கொண்ட சபரிமலை அய்யப்பன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர்.
பத்தனம்திட்டா நகரில் சுட்டிப்பாரா மலை உச்சியில் மகாதேவர் கோயில் உள்ளது. இங்கு ரூ.25 கோடியில் 133 அடி உயரம் கொண்ட ஐயப்பன் சிலை ஒன்றை அமைக்க இக்கோயில் டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. கடல்மட்டத்திற்கு மேல் 400 அடி கொண்ட இக்குன்றின் மீது 66 மீட்டர் சுற்றளவு கொண்டதாக சிலை அமைக்கப்படுகிறது. 35 கி.மீ., தூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் சிலை இருக்கும். ஐயப்பன் பிறந்த ஊரான பந்தளத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும். இந்த ஐயப்பன் சிலைக்கு உள்புறம் மியூசியமும் அமைக்கப்படவுள்ளது. இதில் ஐயப்பன் வரலாறு, சாஸ்தாவின் நண்பர் வாவர், பந்தளம் அரண்மனை, சபரிமலை, பம்பா, அழுதா நதிகள் தத்ரூபமாக அமைக்கப்படவுள்ளது. ஐந்தாண்டுகளில் இப்பணிகள் நிறைவு பெறும் என்றும், இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஐயப்பன் சிலை அமைக்க உத்தேசித்துள்ள சுட்டிப்பாரா மலை குன்றின் ராமரும், சீதையும் சிறிது காலம் தங்கியிருந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. யோக நிலையில் ஐயப்பன் அமர்ந்திருப்பது போன்று சிலை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.