உசிலம்பட்டி; உசிலம்பட்டி எருமார்பட்டி கிராமத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஜக்கம்மாள் கோயில் வழிபாடு நடந்தது. உசிலம்பட்டி எருமார்பட்டி கிராமத்தில் உள்ளது ஜக்கம்மாள் கோவில். தை 2, மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் ஆண்களும், சிறுமிகளும் மட்டுமே கலந்து கொள்கின்றனர். வாகை மரத்தின் அடியில் உள்ள ஜக்கம்மா சிலைக்கும், மரத்திற்கும் பக்தர்கள் கொண்டுவரும் வெள்ளைத்துணி, தேங்காய் பழம், வழிபாடு பொருட்களை வைத்து அலங்காரம் செய்து வழிபாடு நடக்கிறது. தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஜக்கம்மாள் அருள்புரிவதாக கூறுகின்றனர்.
ஜக்கம்மா வாக்கு: நாயக்கர்கள் காலத்தில் ஜோதில்நாயக்கனூர் ஜமீனைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரில் பிறந்த ஜக்கம்மாவை பெண் கேட்டனர். ஜமீனை திருமணம் செய்ய மறுத்த ஜக்கம்மாள் மனமுடைந்து எருமார்பட்டி அருகே உள்ள மலையிலிருந்து கீழே குதித்து இறந்து போனார். அவரது பிரேதத்தை இந்தப் பகுதியில் உள்ள மயானத்திற்கு எருமார்பட்டியைச் சேர்ந்தவர்கள் எடுத்துவந்து எரியூட்டினர். அதன்பின் தான் இங்கு தெய்வமாக இருப்பதாகவும் ஆண்டுதோறும் தான் இறந்த நாளில் வழிபாடு நடத்தும் படியும், தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்த ஜமீன் பூமியில் மலையளவு நெல் விளைந்தாலும் கடுகளவு கொள்ளு விளையாது என ஜக்கம்மாள் வாக்கு கூறியுள்ளார். அதன்படி ஆண்டுதோறும் இங்கு வந்து வழிபாடு நடத்தி வருகிறோம். ஜக்கம்மாள் வாக்குப்படி இந்த பகுதியில் யாரும் கொள்ளு பயிரிடுவது இல்லை. கோயில் பகுதியில் சுடுகாடு இருந்ததால் அப்போதிலிருந்தே ஆண்கள் மட்டும் வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என கிராமத்தினர் தெரிவித்தனர்.