ஆஸ்திரேலியாவில் அட்டூழியம்: மீண்டும் கோயிலில் தாக்குதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2023 02:01
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் ஒரு கோவிலை தாக்கி சேதப்படுத்தியதை அடுத்து இங்கு வசிக்கும் ஹிந்துக்கள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்வாமி நாராயண் கோவில் மீது சமீபத்தில் சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கோவிலின் பல இடங்கள் சேதம் அடைந்தன. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் கோவிலில் எழுதி வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள காரம் டாவ்ன்ஸ் நகரில் பிரசித்தி பெற்ற சிவா விஷ்ணு கோவில் உள்ளது. இது புலம் பெயர்ந்த தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு தலமாக உள்ளது. இந்த கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் தாக்கி சேதப்படுத்தினர்; எதிர்ப்பு வாசகங்களையும் எழுதி வைத்திருந்தனர்.இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உஷா செந்தில்நாதன் என்ற பக்தை கூறியதாவது: நாங்கள் இங்கு சிறுபான்மையினராக வசிக்கிறோம். எங்கள் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதை ஏற்க முடியாது. வன்முறையாளர்கள் மீது ஆஸ்திரேலியா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர்கூறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து கவுன்சில் நிர்வாகி மக்ராண்ட் பகவத் கூறுகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியத்துக்கு ஆஸ்திரேலியஅரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். மெல்போர்ன் ஹிந்து கவுன்சில் உறுப்பினர் சச்சின் மகதே கூறுைகயில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தைரியம் இருந்தால் விக்டோரியா பார்லிமென்ட் சுவற்றில் ஆதரவு கோஷங்களை எழுதட்டும். எங்கள் வழிபாட்டு தலம் மீது கை வைக்க வேண்டாம் என்றார்.