பதிவு செய்த நாள்
19
ஜன
2023
11:01
அன்னூர்: கூத்தாண்டவர் கோவிலில் அரவான் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
அன்னூரில் பழமையான கூத்தாண்டவர் கோவிலில் கொரோனா காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் உடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 17ம் தேதி இரவு குன்னத்தூராம் பாளையம், கூத்தாண்டவர் கோவிலில் இருந்து ஆபரண அணிகலன்கள் அன்னூர் அரவான் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. நேற்று அதிகாலையில் அரவான், அனுமான் சாமிகள் அலங்காரத்துடன் எழுந்தருளினர். நாகமாபுதூர், குன்னத்தூராம்பாளையம் மக்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். அரவான், பொங்கி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது, மாலையில் சுண்டைக்காய் நீராடும் நிகழ்ச்சியும், அபிஷேக பூஜையும் நடந்தது. அன்னூர் நகர பொதுமக்கள் மாலையில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அரவானை வழிபட்டனர். இன்று அரவான், பொங்கி அம்மன், அனுமான் சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து சாணாம் பாளையம், சாலை பாளையம், அல்லி குளம் மக்கள் சார்பில் மாவிளக்கு எடுத்து வருகின்றனர். இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. காட்டம்பட்டி குழுவினர் அரவான் சரித்திரம் வாசிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் அரண்மனை மாவிளக்கும், அன்னூரில் முக்கிய வீதிகளில் வழியாக அரவான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.