பதிவு செய்த நாள்
19
ஜன
2023
10:01
சென்னை,: பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்து விட்ட நிலையில், பொங்கல் மதச்சார்பற்ற பண்டிகையா; ஹிந்து பண்டிகையா என்ற விவாதம், தை மாத குளிரிலும் அனலாக தகித்து வருகிது. உலகம் முழுக்க பண்டிகைகள் இல்லாத நாடே இல்லை. அதுவும், இந்தியாவில் பண்டிகைகள் இல்லாத மாதமே இல்லை. எத்தனை பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், தீபாவளியும், பொங்கலும்தான் இந்திய மக்களின் உணர்வோடு கலந்தவை.
இதில் அறுவடைத் திருநாளான பொங்கல், இந்தியா முழுதும் மகர சங்கராந்தி, மாகி என பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரியன் போன்ற இயற்கையையும், மாடுகள் போன்ற விலங்குகளையும் வழிபடுவது ஹிந்துக்களின் மரபு. பொங்கல் பண்டிகை, வீடுகளை தூய்மைப்படுத்தும் போகியுடன் துவங்குகிறது. இரண்டாவது நாள் அதாவது தை மாதத்தின் முதல் நாள், சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும். இதை சூரிய பொங்கல் என்றே, மக்கள் அழைக்கின்றனர். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல், நான்காவது நாள் காணும் பொங்கல்; அதாவது இயற்கையை வணங்கும் பண்டிகை. திராவிட இனவாத கோட்பாட்டையும், கடவுள் மறுப்பையும் முன்வைத்து உருவான திராவிடர் கழகத்தின், வழித்தோன்றலான தி.மு.க., தமிழகத்தில் செல்வாக்கு பெற துவங்கியதும், பொங்கல் பண்டிகையை, மதச்சார்பற்ற பண்டிகை, திராவிடர் திருநாள், தமிழர் திருநாள் என்று அழைக்கத் துவங்கினார்.
தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரையும், அவருக்கு பின் முதல்வரான கருணாநிதியும் பொங்கலை, மதச்சார்பற்ற பண்டிகையாக மாற்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், ஹிந்துக்கள் அல்லாதவர்கள் பொங்கல் பண்டிகைகளில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2021-ல் தி.முக., ஆட்சிக்கு வந்த பின், திராவிட மாடல் என்ற கோஷத்தை முன்வைத்து வரும் முதல்வர் ஸ்டாலின், பொங்கலை மதச்சார்பற்ற பண்டிகையாக கட்டமைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர், பொங்கல் விழாக்களில் மூன்று மதத்தினரும் கட்டாயம் இருக்குமாறு பார்த்து கொள்கின்றனர். பொங்கல் மதச்சார்பற்ற பண்டிகை என்று கூறிவரும் தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுத்துள்ள எழுத்தாளரும், மத்திய அரசு முன்னாள் செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: வேலுார் கிறிஸ்தவ மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கட்டரின் தாத்தாவான பாதிரியார் ஜான் ஸ்கட்டர், 1849-ல் எழுதிய புத்தகத்தில், ஹிந்துக்களின் திருநாட்கள் என்ற பகுதியில், பொங்கலையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கலாசார, பண்பாட்டு வாழ்வு நெறியை உள்ளடக்கிய ஹிந்து மத பண்டிகைதான் பொங்கல். திராவிட இயக்கத்தினருக்கு வேறு திருநாள் கிடைக்காததால், பொங்கலை எடுத்துக் கொண்டு, வழக்கமான புரட்டுகளை செய்து வருகின்றனர். இதனால், பொங்கலின் அடிப்படை மாறி விடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., ஆதரவாளர்கள், கேரளாவில் ஹிந்து மரபுகள் இருந்தும் ஓணம் பண்டிகைக்கு மதம் கடந்த, தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோல, தமிழகத்தில் பொங்கலை உருவாக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: திராவிடம் என்ற நிலப்பரப்பை, இனவாதமாக தி.மு.க.,வினர் முன்வைத்தனர். ஆனால், அதை கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலத்தவர்கள் ஏற்கவில்லை. ஒரு இனம் என்றால், அதற்கென தனித்த கலாசாரம், பண்டிகைகள் இருக்க வேண்டும்.
ஆனால், திராவிடத்திற்கு பண்டிகைகள் இல்லாததால், பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான, ஹிந்து மரபை அழிக்க முயற்சித்து வருகின்றனர். இப்போதும் தி.க.,வினர் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆனால், தி.மு.க.,வினர் தமிழர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். இதுவே அவர்களின் வரலாற்று திரிபை அம்பலப்படுத்துகிறது. அரசியலில் மதம் கூடாது என்று மதச்சார்பின்மை பேசுபவர்களே, ஒரு மதத்தின் பண்டிகையை மதச்சார்பற்ற பண்டிகை எனக் கூறி, அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க., என்னதான் முயற்சித்தாலும் பொங்கல் ஹிந்து பண்டிகைதான். அதனை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.