பதிவு செய்த நாள்
20
ஜன
2023
12:01
மயிலாடுதுறை: நாங்கூரில் 22ம் தேதி கருட சேவை உற்சவம் - முன்னேற்பாடுகள் பணி குறித்து அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ திருத்தலங்களில் 11 திவ்யதேச கோயில்கள் ஓரே பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் தை மாதம் கருடசேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தங்க கருடசேவை உற்சவம் வருகிற 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது இந்த நிலையில் சீர்காழி ஆர்டிஓ. அலுவலகத்தில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சுந்தரம் தலைமையில் கருட சேவை தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் விழா நடக்க ஓரிரு நாள் மட்டுமே இருப்பதால் எந்த முன்னேற்பாடுகளும் சரிவர நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் புகழ்பெற்ற தங்க கருட சேவை உற்சவத்திற்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கழிவறை உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேர்முக உதவியாளர் சுந்தரம் தெரிவித்தார். கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன், திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், பூம்புகார் தீயணைப்பு நிலை அலுவலர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கருட சேவை கமிட்டி செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.