பதிவு செய்த நாள்
20
ஜன
2023
05:01
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்று படுகைகளில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்படும் நிலையில், அவற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக ஆற்றங்கரை ஓரங்களில் தண்ணீரை மையமாக வைத்து மக்கள் தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டிருந்தனர். இதன்படி ஒவ்வொரு காட்டாற்று வெள்ளப்பெருக்குகளின் போதும் ஆறு தன் நிலையை மாற்றி அமைத்த சூழலில் பழங்கால சுவடுகள் அழிந்துள்ளன. அந்த வரிசையில் மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமநாதபுரம் நோக்கி செல்லும் வைகை ஆற்றங்கரையோரம் வாழ்ந்த மக்களின் தடயங்கள் பலவும் கிடைக்கப்பெறுகின்றன. தொடர்ந்து நாணயவியல் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது பரமக்குடி வைகை ஆற்றின் நீரோட்டத்திற்கு மத்தியில் பழங்கால நாணயங்களை தேடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அரசர் கால நாணயம் துவங்கி, புழக்கத்தில் இல்லாத பல்வகையான நாணயங்களையும் கண்டெடுக்கின்றனர். இவற்றை திருச்சி, மதுரை என ஆய்வாளர்களிடம் கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கடல் சார் மற்றும் ஒருங்கிணைந்த தமிழியில் ஆர்வலர் ஒரிசா பாலு கூறிய போது: வைகை ஆற்றங்கரை நாகரீகம் கல்வெட்டுகள், நடு கற்கள், பாறை ஓவியங்கள் மற்றும் பழங்கற்கால கருவிகளை வைத்து மட்டும் உருவாக்கப்படவில்லை. ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் மற்றும் நாணயவியலையும் மையமாக வைத்துள்ளது. நாணயங்கள் நகரும் பொருளாக மாறி வருவதால் நம் வரலாற்றை தொலைக்கும் விதமாக மாறி உள்ளது. இதனால் அரசு வரலாற்று பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் இது போன்ற நாணயங்களை முறையாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மண்ணுக்கடியில் தற்செயலாக சொந்த நிலத்தில் கிடைத்தாலும் அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே இன்றைய சூழலில் தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறையினர் இது போன்ற நாணயங்களை மீட்டு வரலாற்றை, மேலும் உலகெங்கும் உள்ளவர்கள் அறிய வழிவகை செய்ய வேண்டும், என்றார்.