சிதம்பரம் நடராஜருக்கு தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2023 06:01
சிதம்பரம்: தை அமாவாசையையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
தை அமாவாசையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி தை அமாவாசையான இன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகர சுவாமி நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு சிவகங்கை குளத்துக்கு சென்றார். சிவகங்கை குளத்தில் சந்திரசேகரர் முன்னிலையில் அஸ்திர ராஜருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கிள்ளை கடற்கரை, அம்மாபேட்டை புளிமேடு தீர்த்தகுளம், இளமையாக்கினார் கோயில் வியாக்ர தீர்த்தகுளம் அனந்தீஸ்வரர் கோயில் ஆனந்த தீர்த்தம், நாக சேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத் தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவில் சிவப்ரியை தீர்த்தம். புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற் கடல் தீர்த்தம், நடராஜர் கோவிலில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்தக்கிணறு பரமானந்த கூடம் ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது, இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.