பதிவு செய்த நாள்
21
ஜன
2023
06:01
தொண்டாமுத்தூர்: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆய்வு நடத்திய பின், தமிழகத்தில் உள்ள ஐந்து கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பழனி கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவில் யானை குளிப்பதற்கான தொட்டி கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், சிவராத்திரி விழா நடக்க உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கலெக்டர் சமீரன், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். அதன்பின், மாலையில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை, அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அதனைத்தொடர்ந்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, தேர் ஷெட், கோவில் தெப்ப குளத்தையும் ஆய்வு செய்து, புனரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்," பழனி கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்தேன். அதன்பின், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ஆய்வு செய்தேன். இந்த ஆண்டு, மகா சிவராத்திரி விழாவை, தமிழகத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களிலும், வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதில், ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பழமையான இசைக்கருவிகள் காட்சிப்படுத்த உள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதங்கள் வழங்கப்படும். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், லிப்ட் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும். விரைவில், 3½ கோடி ரூபாய் செலவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,"என்றார்.