சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2023 08:01
ஸ்ரீவில்லிபுத்தூர், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் மதுரை மாவட்டம் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவியத் துவங்கினர். நேற்று காலை 6:15 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என அறிவிக்கபட்ட நிலையில், ஏராளமானோர் வந்ததால் மதியம் 3:00 மணி வரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலை ஏறினர். இக்கோயிலில் காலை 11:00 மணிக்கு பிறகு சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறை, போலீசார் மலை அடிவாரம் முதல் கோயில் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு மருத்துவக்குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அரசு பஸ் டிப்போக்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், ஊழியர்கள் செய்தனர்.