பதிவு செய்த நாள்
22
ஜன
2023
07:01
பல்லடம்: சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வீரத்துக்கு பெயர் பெற்றவர் என்றால், அது வீரபாண்டிய கட்டபொம்மன்தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மாவீரனான இவர், தனது இறுதி மூச்சு உள்ளவரை நாட்டுக்காக போராடினார். ஆங்கிலேயரின் சூழ்ச்சி காரணமாக, தூக்கிலிடப்பட்டு, நாட்டுக்காக வீர மரணம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கயத்தாறு பகுதியில், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரது உருவ சிலையுடன் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கட்டபொம்மன், ஜக்கம்மா தேவியை குல தெய்வமாக வழிபட்டு வந்தார். அவரது வம்சாவழியினர், கட்டபொம்மன் நினைவாக ஜக்கம்மா தேவியை இன்றும் வழிபட்டு வருகின்றர். மணிமண்டப வளாகத்திலேயே ஜக்கம்மாதேவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்ய வம்சாவளியினர் தீர்மானித்தனர். இதையடுத்து, கடந்த, 2009ம் ஆண்டு கோவில் கட்டி ஜக்கம்மா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவில் வழிபாடுகள் நடந்து வந்த நிலையில், 13 ஆண்டுக்கு பின், மீண்டும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளால், கடந்த ஜன., 18 அன்று மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் தூத்துக்குடி மனிதநேயர் மயில்வேல், உலக சமாதான தெய்வீகப் பேரவை அறங்காவலர் சிவகங்கை சத்தியந்திரன், மருதுபாண்டியர் அறக்கட்டளைத் தலைவர் துரைசாமி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணன், செண்பகராஜ் மற்றும் கோவை காமாட்சிபுரி ஆரியன இந்திய கலைப் பண்பாட்டு பயிற்சி மையக் குழுவினர் விழாவை ஒருங்கிணைத்தனர். கட்டபொம்மன் மறைந்து, 223 ஆண்டுகள் கடந்தும், அவர் புகழ் இன்னும் மறையவில்லை. வம்சாவளியினர் மூலம் கட்டபொம்மன் மட்டுமன்றி, அவர் வழிபட்டு வந்த ஜக்கம்மாவுக்கும் கோவில் கட்டி வழிபட்டு வருவது, வரலாற்று புகழை இன்றும் பறைசாற்றி வருகிறது.