ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளி தேரோட்டம் ரத்து : பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2023 10:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசை அன்று ஆன்மிக மரபு மீறி வெள்ளி தேரோட்டத்தை ரத்து செய்தனர். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் தை, மாசி, புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் ஆடி திருக்கல்யாணம் 7ம் நாள் விழா ஆகிய ஆண்டுக்கு 4 நாள்கள் கோயிலில் உள்ள 20 அடி உயர வெள்ளி தேர் இரவில் மின்அலங்காரத்துடன் ரத வீதியில் உலா வரும். இது பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஆன்மீக மரபாகும். ஆனால் ஆன்மீக மரபை மீறி ஜன., 21 தை அமாவாசை அன்று வெள்ளி தேர் வீதி உலாவை கோயில் அதிகாரி ரத்து செய்தார். இத்தேர் வீலில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாமல் விட்டதால், தேரோட்டம் நடக்கவில்லை. அன்றிரவு வெள்ளி தேரோட்டத்தை எதிர்பார்த்து வீதியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து வி.ஹெச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில் : கடந்த அக்., 12ல் வெள்ளி தேரை புதுப்பித்த போது வீலில் சேதமானது குறித்து அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் அதனை சரி செய்ய முன்வரவில்லை. இதனால் பல நூறு ஆண்டுகளாக நடந்த வெள்ளி தேரோட்டம் நேற்று முன்தினம் நடக்கவில்லை. கோயிலுக்குள் தரிசனம் என்ற பெயரில் பக்தரிடம் பணத்தை கறப்பதில் கவனம் செலுத்தும் அதிகாரிகள், ஆன்மிக மரபுகளை காற்றில் பறக்க விட்டு ஹிந்து மத கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர். இது வேதனைக்குரியது என்றார்.