பதிவு செய்த நாள்
24
ஜன
2023
04:01
திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில், ரோப்கார் அமைக்க போதுமான இடம் இல்லாததால் சாத்தியமில்லை, என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது: திருச்செந்துாரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம், 2007ம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டது. அதற்கும், தற்போதைய தி.மு.க., அரசுக்கும் சம்பந்தமில்லை. எனக்கோ, என் உறவினர்களுக்கோ சென்னை துறைமுகத்தில் இடம் இல்லை. பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிரூபிக்க தயாரா? அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்று பா.ஜ., நினைக்கிறது. கோவில்களை, அவர்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல நினைக்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை நாலு கால் பாய்ச்சலில் சென்று கொண்டுள்ளது. இதை சகித்துக் கொள்ளாதவர்கள், ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், ஏதோ ஒரு வகையில் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த, 1959ல் உருவாக்கப்பட்ட இந்த துறை, எந்த காலத்திலும் இல்லாத வகையில், புத்துணர்வு பெற்று, ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால், கோவிலை விட்டு வெளியேறுவதற்கான சூழலும் இல்லை. திருச்சி மலைக்கோட்டைக்கு, ரோப்கார் அமைக்க போதுமான இடமில்லாததால், சாத்தியமில்லை. அதற்கு மாற்றாக, லிப்ட் அமைக்கலாமா என்பது குறித்து மாற்றுத் திட்டத்தை பரிசீலித்து வருகிறோம்.
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேத்தில் பங்கேற்க, 47 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 2,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 6,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும்; அவ்வளவு தான் அங்கு இடமும் உள்ளது. மேலும், ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று, மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
1,000 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில், 1,100 ஆண்டுகள் பழமையான, சோழர் காலத்திற்கு முன் கட்டப்பட்ட மங்கள லட்சுமி சமேத அழகுராஜ பெருமாள் கோவில் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 3,943 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பிலிருந்த, 1,000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை என்ற முத்திரையிட்ட தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.தக்கோலம் மங்கள லட்சுமி சமேத அழகுராஜ பெருமாள் கோவில் புனரமைக்கப்படுவதால், அங்கு வசித்த 53 குடும்பங்களுக்கு மாற்றிடம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.