பதிவு செய்த நாள்
24
ஜன
2023
04:01
சென்னை : பழநி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள பக்தர்களுக்கு, அந்தந்த மாவட்ட அறநிலையத் துறை அலுவலகம் சார்பில், அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், 16 ஆண்டுகளுக்குப் பின், வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்களில் 2,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பல்லாயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதி சீட்டு, பழநியில் வழங்கப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இது, பக்தர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பாபிஷேகம் நடக்கும் அன்றோ, அதற்கு முதல் நாளோ பழநி சென்று, அனுமதி சீட்டு பெறுவது பெரும் சிரமம் என, பக்தர்கள் கருதுகின்றனர். எனவே, கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.