பதிவு செய்த நாள்
25
ஜன
2023
10:01
திருப்பூர்;திருப்பூரை அடுத்த காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூசம் தேர்த்திருவிழாவில் பாதுகாப்பு பணியில், 250 போலீசார் கண்காணிக்க, 160 சிசிடிவி கேமரா பயன்படுத்த உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூசம் தேரோட்டம் வரும், பிப்., 5, 6 மற்றும் 7 என, மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தாராபுரம் ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமை வகித்தார். காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, உதவி கமிஷனர் (பொறுப்பு) அன்னக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் காமராஜ் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், தேரோட்டம் நடக்கும் நாட்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதாரம் பேன கூடுதல் பணியாட்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் ஏனைய இடங்களில், 160 சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வைப்பது. பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ வாகனங்களை தயார் நிலையில் வைப்பது, மலையடிவாரத்தில் நெரிசலை குறைக்க தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பக்தர்கள் கோவிலுக்கு சிரமின்றி வந்து செல்ல கூடுதல் பஸ்களை போக்குவரத்துறை மூலம் இயக்குவது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் பறிமுதல், ரசாயனம் கலந்த வண்ண பொடிகளை பயன்படுத்தி உணவு பண்டங்களை தயாரித்து விற்பனை செய்ய கூடாது உட்பட பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டது.