பதிவு செய்த நாள்
29
ஜன
2023
10:01
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டண பிரவேசம் நிகழ்ச்சியில் குரு மகா சன்னிதானங்கள், தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை14ம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகள் தொடங்கி வைத்தார். குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளில் குருபூஜை விழா தை- அசுவதி தினமான நேற்று நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு தோத்திரப் பாடல் பாராயணத்துடன், குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பூஜையின் போது நாதஸ்வர வித்துவான்கள் ராஜகோபால், மனோகர், தவிலிசை வித்துவான்கள் செந்தில்குமார், அர்ஜுனன், கவிஞர் நாதமணி ஆகியோருக்கு பொற்கிழி தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் சிறப்பு விருதுகளை ஆதீனம் 24 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார். மதியம் மாகேஸ்வர பூஜை நடந்தது. மாலை திருவாவடுதுறை ஆதீன வித்துவான் நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின
வயலின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் கோமுக்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் 10 சேவை அமைப்புகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அருட்கொடையும், சிறந்த சமுதாய சேவகர் எனும் விருதும் வழங்கினார். தொடர்ந்து திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு அருட்கொடை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிவிகாரோகணம் எனும் பல்லக்கில் எழுந்தருளி பட்டண பிரவேசம் நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்து ஆதீன குரு மகா சன்னிதானத்தை வழிபட்டு குருவருளை பெற்றனர். நிறைவாக திருமடத்தின் கொலு மண்டபத்தில் சிவஞானக் கொலுக்காட்சி நடந்தது. இதில் செங்கோல் ஆதீனம் 103 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், துலாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய தேசிக சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கட்டளை மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பல தம்பிரான், வேலப்ப தம்பிரான் மற்றும் மதுரை ஆதீனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பி. நிஷா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.